திங்கள், 13 நவம்பர், 2017

பழமையும் பாரம்பரியமும்....!

பழமையும் பாரம்பரியமும்....!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூர் என்று இன்று அடையாளப்படுத்தப்படும் எங்கள் பழஞ்சூர் கிராமம்தான் சோழநாட்டின் எல்லையாக இருந்திருக்க வேண்டும்,

எங்கள் ஊரின் எல்லையை "கதவடைச்சான்" என்று குறிப்பிடுவதும், அதனை குறித்த செவிவழி செய்திகளும் அப்படிதான் சொல்கிறது, சோழர்கள் எடுப்பித்த பெரும்பாலான சிவனாலயங்கள் காவிரிபடுகைகளில் அமைந்திருக்கும்போது தெற்கு எல்லையில் பழஞ்சூரிலும் ஒர் சிவாலயம் "பழமலைநாதருக்கும்" அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கிராமத்தையடுத்த சிறிய நிலப்ப்பரப்பு (இன்றைய கிழக்கு கடற்கரை சாலை) பெரும்வழியாக பழங்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு (உதாரணம் : இந்த சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மடங்களும், சத்திரங்களுமே சாட்சி, இராஜாமடம், அம்மணி சத்திரம், சேதுப்பாவாசத்திரம் போல..)

அந்த பெருவழியை ஒட்டி வங்காள விரிகுடா கடல் ஆக சோழநாட்டின் வரவேற்பு அல்லது எல்லை அல்லது நுழைவாயிலாக எங்கள் ஊரின் "கதவடைச்சான்" இருந்திருக்க வேண்டும். (இன்றைக்கு மும்பை, டெல்லியில் இருக்கும் இண்டியாகேட் போல..)

அந்த பெருவழி சாலை வழியாகவே (இன்றைய கிழக்கு கடற்கரை சாலை) அன்று ஆன்மீக பயணங்கள் அதாவது இராமேஸ்வரம் போன்ற இடங்க்களுக்கும், வணிக, போர் படையெடுப்புகள் பாண்டிய, சேர நாட்டிற்க்கும் இவ்வழியாகவே நடைபெற்று இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.

அப்படியான ஏதோ ஒரு அன்னிய படையெடுப்பு அது பாண்டியர் படையெடுப்பாகவோ, பல்லவர் படையெடுப்பாகவோ, முகாலயர் படையெடுப்பாகவோ இருந்திருக்கலாம், பெருவழியை ஒட்டிய இந்த சிவாலயம் இத்தகைய படைகளினால் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம்.

அல்லது இந்த ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை வைத்து இது முற்றிலும் சைவமதம் கோவிலாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்களின் சிலைகள் இருந்தது) ஆக சைவ, வைணவ மோதல்களினால் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம்.

அல்லது சமணர்களுக்கும், சைவர்களுக்குமான மோதல்களினால் சேதப்படுத்தப் பட்டிருக்கலாம், ஆங்கிலேயர்களை இந்த பட்டியலில் சேர்க்க முடியாது அவர்கள் ஆட்சிகாலத்தில் கோவில்கள் எதுவும் இடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை...

முகாலயர்களின் பாண்டியநாட்டின் மீதான படையெடுப்பு இந்த பாதையின் வழியே நடந்திருக்க கூடுதல் வாய்ப்புண்டு அந்த காலகட்டத்தில் அருகில் இருந்த இந்த சிவாலயம் சிதைக்கபட்டு இருக்கலாம்.

அல்லது ஆழிப்பேரலை (சுனாமி) புயல்போன்ற இயற்கை பேரழிவுகளின் போது இங்கு கட்டப்பட்டு இருந்த சிவாலயம் சிதைந்திருக்கலாம்.

சிவன்கோவில் மேடு என்று இன்றும் நாங்கள் அழைக்கும் இந்த மேட்டில் வெரும் ஒரு சிவலிங்கம் மட்டுமே இருந்தது, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இளைஞர்கள் கூடி அதற்கு ஒரு கீற்று கொட்டகை அமைத்து பராமரித்து வந்தனர் அடுத்த சில ஆண்டுகளில் சிறிய அளவில் கோவில் கட்ட எண்ணி சுமார் 2 அடி ஆழம் பள்ளம் தோண்டியபொழுது நிறைய கற்சிலைகள் கிடைத்தன (இன்றும் கோவில் வளாகத்திலேயே அவை இருக்கிறது) பின்னர் பொருளாதார பற்றாக்குறையால் அப்பணி தொடந்து நடைபெறவில்லை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை முழுமையாக கட்டமைக்க எண்ணி திருப்பணி குழு அமைத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் வேளையிலேயே இப்போது சில சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது.

ஆய்வுகள் முடிந்தபிறகே எந்த காலத்தை சேர்ந்த சிலைகள் என்பதை அறியமுடியும் அதன் பின்னரே முழுமையான வரலாற்றினை தேட முடியும்.
வரலாற்றின் பக்கங்களின் நீண்டு வந்திருக்கும் எங்கள் கிராமம் குறித்து அதீத பெருமையை நாங்கள் இன்று அனுபவித்து வருகிறோம்.

நன்றி
கா.சஞ்சய்காந்தி

குறிப்பு : மேற்சொன்ன பெருவழிகள்,படையெடுப்புகள், இயற்கை பேரழிவுகள் எல்லாமும் கற்பனையே எப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதை அறியும் முயற்சியே... இதில் மாறுபாடான கருத்துக்கள் இருந்தால் வரவேற்கிறேன்.





ஞாயிறு, 12 நவம்பர், 2017

ஓம் சிவாய நம...

ஓம் சிவாய நம...

என்றும்போலவே இன்றும் இயல்பாகவே விடிந்தது பொழுது, என்றென்றும் என்னை இயக்கும் எனது அருளாளன் எம்பெருமான் சிவபெருமான் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் மண்ணுக்குள்ளே இருந்தாரோ யாம் அறியேன், ஐப்பசி மழைபொழுதில் பொங்கி வெளிவந்திருக்கிறார் இன்று.
எனது வீட்டுக்கு பின்பகுதியில் (வீட்டை ஒட்டியே) வெறும் கல்லால் ஆன ஒரு சிவலிங்கம் அத்தனை பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடந்தது பல ஆண்டுகளாக,

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த புதர்களை சீர் செய்து இளைஞர்கள் சிலர்கூடி ஒரு கீற்று கொட்டகை அமைத்து பராமரித்து வந்தனர், காலப்போக்கில் கீற்றுக்கொட்டகையை தவிர்த்துவிட்டு ஒரு கட்டுமானம் செய்ய எண்ணி சிறுபள்ளங்கள் தோண்டியபொழுது கல்லால் ஆன சில சிலைகள் கிடைத்தது, போதிய பொருளாதாரமில்லாமல் அந்தபணியும் அத்தோடு நிறுத்தப்பட்டது,

மிக சமீபத்தில் அருள்மிகு பழமழைநாத சுவாமிகள் என்று அறியப்பட்ட இந்த சிவலிங்கத்தை மையப்படுத்தி ஒரு ஆலயம் எடுப்பிக்க கிராமத்தவர்கள் முடிவு செய்து சில லட்சங்களை மிகுந்த சிரமத்தோடு திரட்டி கோவில் கட்டுமானப்பணிகள் இனிதென தொடங்கி நடந்துவருகிறது கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கும் இந்த தருணத்தில்
இன்று கட்டுமானத்திற்காக பள்ளம் தோண்டும்பொழுது கொத்துகொத்தாக ஐம்பொன் சிலைகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது, இன்னும் பல சிலைகள் இருப்பதையும் காண முடிகிறது அரசு உயரதிகாரிகளின் வருகைக்காக சிலைகளை மண்ணிலிருந்து எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை வெளிவந்ததில் நடராஜர், விநாயகர், இன்னும் பல சிலைகள் இருக்கின்றது.

இந்த சிலைகள் எத்தனை நூற்றாண்டுகள் மண்ணில் மறைந்திருந்தது என்பதை அறியும்பொழுதுதான் இந்த சிவாலயத்தின் பாரம்பரியம் உலகறியும், எங்கள் கிராமமே ஆச்சர்யத்தில் மூழ்கி கிடக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்திருக்கிறது எங்கள் பாரம்பரியமான பழஞ்சூர் கிராமம்

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்.












































பழஞ்சூர்



சிலைகளை பாதுகாப்பாக கும்பகோணம் சிலைகள் காப்பகத்தில் ஒப்படைத்து திரும்பினோம்.
சிலைகளை ஆய்வுகள் முடித்து கோவில் திருப்பணிகள் முடிந்த உடன் திருப்பி தருவார்கள்

பழஞ்சூர்

பழஞ்சூர்

பழஞ்சூர் எங்க ஊரு எங்க மண்...

அருள்மிகு பழமலைநாதர் ஆலயம்